நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 7031 பேர் எழுதினர்

 

ஊட்டி, ஜூன் 10: நீலகிரி மாவட்டத்தில் 37 மையங்களில் நடந்த குரூப்-4 தேர்வினை 7031 பேர் எழுதினர். 2917 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாட்டில் விஏஒ, வன காவலர், இளநிலை உதவியாளர் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் குரூப்-4 எழுத்து தேர்வு நேற்று நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்விற்கு என மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வெழுத தகுதி வாய்ந்த 9948 பேர் எழுத ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. இத்தேர்வை 7031 பேர் எழுதினர். 2917 பேர் எழுதவில்லை.

ஊட்டி வுட்சைட் பள்ளி, சிஎஸ்ஐ‌, சிஎம்எம் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் அருணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊட்டி ஆர்டிஓ மகராஜ், வட்டாட்சியர் சரவணகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தேர்வை முன்னிட்டு முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் அதனை கண்காணிக்கும் வகையில் 6 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

The post நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 7031 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: