உரிய ஆவணங்கள் இல்லாததால் கொல்லத்தை நோக்கி சென்ற லாரியில் மோட்டார் பம்ப் செட்கள் பறிமுதல்

பாலக்காடு, ஜூன் 9: கோவையிலிருந்து கொல்லத்தை நோக்கி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சுமார் 3 லட்சம் மதிப்பில் 229 புதிய மோட்டார் பம்பு செட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், பம்புசெட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரள-தமிழக எல்லையில் வேலந்தாவளத்தில் கேரள மாநில அரசின் கலால் துறை சோதனைச்சாவடி அருகே கலால் துறை அதிகாரி அஜித் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக கொல்லத்தை நோக்கி லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வந்தது. இதனை தடுத்து சோதனை நடத்தினர்.

இதில், டயர் லோடு ஏற்றிவந்த லாரியில் கேபினிற்கு மேல் சிறப்பு அறை அமைத்து அதில் 229 புதிய மோட்டார் பம்பு செட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பம்பு செட்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தியது தொடர்பாக ஒருவரை கைது செய்து, லாரி மற்றும் பம்புசெட்களை சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post உரிய ஆவணங்கள் இல்லாததால் கொல்லத்தை நோக்கி சென்ற லாரியில் மோட்டார் பம்ப் செட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: