கோடை விடுமுறைக்கு பின் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

 

ஊட்டி, ஜூன் 11: கோடை விடுமுறைக்கு பின் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. முதல் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு இறுதித்தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 6ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இருந்ததால் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறை நேற்று முன் தினத்துடன் முடிந்த நிலையில், நேற்று முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை குன்னூர், கூடலூர் கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 698 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.  இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக பள்ளி வளாகங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி தயார் செய்யப்பட்டன. தொடர்ந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவியர்கள் புது புத்தகப்பை, சீருடைகள் அணிந்து ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முதல் நாளன்றே மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. பள்ளி துவங்கிய முதல் நாளான நேற்று அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி, உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்பட்டன.

இன்று முதல் வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீருடை உள்ளிட்டவைகள் இனிவரும் நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் அட்டை பதிவு முகாம் நடத்தப்படும் என அறிவித்தது. இப்பணிகளும் பள்ளிகளில் நேற்று முதல் துவங்கியுள்ளது.

The post கோடை விடுமுறைக்கு பின் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: