மாவட்டத்தில் பெய்யும் மழை எதிரொலி அணைகளின் நீர்மட்டம் உயர்கிறது

ஊட்டி, ஜூன் 9: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வரும் நிலையில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர துவங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் மழை தீவிரமடையும் பட்சத்தில் முழு கொள்ளளவு எட்ட வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக முக்கூருத்தி, அப்பர்பவானி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா மற்றும் பில்லூர் உள்ளிட்ட 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. இவற்றில் உள்ள நீரை கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா மற்றும் சிங்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.

இதில், அப்பர்பவானி அணையே பிரதான அணையாக விளங்கி வருகிறது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் ஆகிய 5 நீர்மின் நிலையங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நீலகிரியில் உள்ள மின் நிலையங்கள் மூலம் மட்டும் சுமார் 845 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 மெகாவாட் நீலகிரி மாவட்ட பயன்பாட்டிற்கும், மீதம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, செப்டம்பா் துவங்கி நவம்பா் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள் நிரம்பி விடும். இதனால் மின் உற்பத்திக்கு பிரச்சனை ஏற்படாது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி சில நாட்கள் மட்டுமே பெய்தது. இதனால் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீா்மட்டம் உயரவில்லை. பின்னர் அக்டோபா் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால் எமரால்டு, அவலாஞ்சி அணைகள் வறண்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறின. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி அணைகளில் நீர் இருப்பு 35 சதவீதத்திற்கும் குறைவாக சென்றது. இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஜனவரி துவங்கி மே மாத இரண்டாவது வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்த நிலையில் அணைகள் மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் நீர் இருப்பு கடுமையாக சரிந்தது.

எமரால்டு, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட அணைகளில் நீர் மட்டும் தரைதட்டியது. இதன் காரணமாக மே மாதம் இரண்டாவது வாரத்தில் 150 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது. அப்பர் பவானி அணையில் மட்டும் ஓரளவிற்கு நீர் இருப்பு இருந்த நிலையில் கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. இதனிடையே அனைத்து தரப்பு மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மே மாத கடைசி வாரத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதேபோல் இம்மாதத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர்மட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்தி 400 மெகா வாட் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இனிவரும் நாட்களில் மழை தீவிரமடையும் பட்சத்தில் அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்ட வாய்ப்புள்ளது.

The post மாவட்டத்தில் பெய்யும் மழை எதிரொலி அணைகளின் நீர்மட்டம் உயர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: