பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை மந்தம்

செய்துங்கநல்லூர், ஜன.11:பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை இல்லாததால் தொழிலாளிகள் வேதனை

அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இங்கு சுற்றுவட்டாரங்களில் விளையும் காய்கறி மற்றும் மீன், கோழி, ஆடுகள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்கு ெகாண்டு வருவர்.நேற்று முன்தினம் நடந்த வாரசந்தையில் பொங்கலுக்காக மண்பாண்டங்களான பானை, சட்டி, உலைமூடி, அடுப்பு மற்றும் அடுப்பு கட்டி உள்பட பல பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அடுப்பு ரூ.150, பானை ரூ.200, சட்டி ரூ.100, அண்டைகட்டி மூன்றுக்கு ரூ.300 என விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை.
Advertising
Advertising

மக்கள் பித்தளை பானைகளின் மேல் மோகத்தால் மண்பானை கடந்த வருடத்தைவிட மிக குறைந்த அளவிலேயே விற்றுள்ளது. இதனால்  மண்பாண்ட வியாபாரிகள் விரக்தி அடைந்தனர். இதுகுறித்து மண்பாண்ட வியாபாரி பேச்சியம்மாள் கூறுகையில், செய்துங்கநல்லூரில் மண்பாண்ட தயாரிப்பாளர்கள் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர். பொங்கல் நேரங்களில் மூன்று இடங்களில் சூளை வைத்து விடுவோம்.  தற்போது மண்பாண்ட மோகம் குறைந்தது. மண் எடுக்க தடை உள்பட பல பிரச்னைகளால் இந்த தொழில் மிகவும் நசிந்து வருகிறது. கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை நாட்களில்தான் மண்பாண்ட வியாபாரம் ஓரளவு நடைபெறும். இந்த ஆண்டு வியாபாரம் மிக மந்தமாக உள்ளது.

பலர் பொருள் பற்றி கேட்டு செல்கிறார்கள். ஆனால் வாங்கவில்லை. குறைந்தளவிலான பொருள் கூட விற்றுள்ளது. பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. பொங்கலுக்காக செய்துங்கநல்லூர் சந்தை மீண்டும் கூடவுள்ளது. அப்போதாவது எதிர்பார்த்தபடி மண்பாண்டங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார். சமையல் உள்பட நலன் தரும் தன்மை மண்பாண்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கிறது. எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பொங்கலுக்கு அனைவரும் மண்பாண்ட  பொருட்களை  வாங்கி பயனடைய வேண்டும் என தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: