கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைய விருத்தாசலம், திட்டக்குடி வியாபாரிகள் எதிர்ப்பு

வேப்பூர், ஜன. 10: தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார். இத்துடன் சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகள் இணைக்கப்பட உள்ளது. மேலும் திருக்கோவிலூர் பகுதியையும் இணைக்க பரிசீலனை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதற்கு திருக்கோவிலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதி எப்போதும் விழுப்புரம் மாவட்டத்துடன்தான் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் போன்ற பகுதிகளையும் இணைக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாகி வருகிறது. இதற்கு விருத்தாசலம், திட்டக்குடி பகுதி வியாபாரிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேப்பூர் பகுதி மக்களைப் பொறுத்தவரை கள்ளக்குறிச்சியுடன் இணைந்தால் மாவட்டத் தின் கடைகோடி பகுதியாகவே இருக்கும். இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. கடலூருக்கு செல்வதற்கும் 110 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். வேப்பூர் தாலுகாவில் 53 ஊராட்சிகள் உள்ளன. ராமநத்தத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. எனவே விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்கி அதனுடன் இணையவே வேப்பூர், ராமநத்தம், சிறுபாக்கம் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பது சிறந்ததாக இருக்கும். இதற்காக அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் சாலையோரத்திலேயே உள்ளது. எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க வேண்டும். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியிலேயே விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க உறுதி அளித்திருந்தார். விருத்தாசலம் பகுதி வளர்ச்சி அடையாமல் உள்ளது. எனவே தற்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Related Stories: