நாளை கார்த்திகை தீபவிழா அகல்விளக்கு விற்பனை மும்முரம்

சிதம்பரம், நவ. 22: தமிழகத்தில் நாளை( 23ம் தேதி) கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. தீப விழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருக்கார்த்திகை அன்று வீடுகளில் வரிசையாக அகல் விளக்குகளை வைத்து தீபமேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். கோயில்களிலும் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். கார்த்திகை தீபத்திற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தொடங்கியது. அண்மையில் பெய்த மழையினால் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது அகல் விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. நாகை ஆச்சாள்புரம், அரியலூர், முத்துபேட்டை, ஆலங்காடு, விருத்தாசலம், திருவண்ணாமலை, கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை விதம் விதமாக செய்து வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். கார்த்திகை தீப விழா நெருங்கி கொண்டிருப்பதால் மக்கள் அகல் விளக்குகளை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிதம்பரம் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் அகல் விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகள் ரூ.1.50 முதல் ரூ.50 வரையில் சைஸ் வாரியாக விதம், விதமாக உள்ளது.

Related Stories: