தமிழகத்தில் 2017-18ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தொழுநோயால் 4,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கூட்டுவகை மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்

வேலூர், நவ.19: தமிழகத்தில் 2017-18ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தொழுநோயால் 4,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கூட்டுவகை மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தொழுநோயை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசு சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கென அரசு மருத்துவமனைகளில் தனிபிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களைக் கண்டறிந்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள இல்லங்களில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

தொழுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்து, உரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்து முழுமையாக ஒழிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து மருத்துவ சிசிச்சைகள் அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தொழுநோய் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி 2017-18ம் ஆண்டிற்கான தொழுநோயாளிகள் கண்டறியும் முகாம் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதில் செவிலியர்கள், கிராம செவிலியர்கள், பயிற்சி பெற்ற தனியார் நர்சிங் மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என்று 96 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 19 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடந்த முகாமில் சுமார் 4,277 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்(தொழுநோய்) அப்சல் அலி கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டில் 151 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டன. இந்த ஆண்டிற்கான தொழுநோய் கண்டறியும் முகாம் 20 ஒன்றியங்களில் நடந்தது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சுமார் 150 பேர் வீதம் செவிலியர்கள், பயிற்சி பெற்ற நர்சிங் மாணவர்கள், தன்னார்வலர்கள் என்று 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

வீடுவீடாக சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வலி மற்றும் வலி இல்லாத தேமல், காது மடல் தடித்து இருத்தல், உடலில் சின்னகட்டிகள் ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டன. அதில், வேலூர் மாவட்டத்தில் 195 பேர் தொழுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், பெரும்பாலானவை தொடக்க நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தொழுநோய்க்கு சிறப்பு சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 3 வகையான கூட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றால் இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தலாம். எனவே கூட்டு வகை மருத்துவ சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: