ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ராணுவ வீரர் தவறி விழுந்து பலி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில்

ஜோலார்பேட்டை, நவ.14: ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ராணுவ வீரர் தவறி விழுந்து பலியானார். கர்நாடகம் மாநிலம், பெல்காம் பகுதியை சேர்ந்தவர் வீரண்ணா(36). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் பணிக்குச் செல்ல யஸ்வந்த்பூரிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணம் செய்தார். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது கடைக்கு சென்று மீண்டும் ரயில் ஏறுவதற்கு சென்றார். அப்போது, அவர் வந்த ரயிலில் ஏறுவதற்கு பதிலாக தவறுதலாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பின்னர் பெங்களூர் செல்லும் ரயில் என்பதை அறிந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார்.

அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை கண்ட சகபயணிகள் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினர். இதனால் ராணுவ வீரரின் கால் ரயில் பெட்டிக்கும் பிளாட்பார தடுப்புசுவருக்கும் இடையில் சிக்கி துண்டானது. இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த ராணுவ வீரரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி வர்ஷா என்ற மனைவி உள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: