1.50 லட்சம் கொடுக்க மறுத்த தந்தையை கொல்ல முயற்சி மகன் உட்பட 3 பேர் கைது வாணியம்பாடி அருகே நள்ளிரவு பயங்கரம்

வாணியம்பாடி, நவ.14: வாணியம்பாடி அருகே 1.50 லட்சம் தர மறுத்த தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொல்ல முயன்ற மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(40), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவருக்கு கடந்த ஓராண்டாக விவசாய கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடனை அடைப்பதற்காக குமார், தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை விற்றுள்ளார். இதையடுத்து, குமார் தனது நிலத்தை விற்ற பணம் ₹8.50 லட்சத்தில் கடன் தொகை ₹5.50 லட்சத்தை கடந்த 11ம் தேதி சம்பந்தப்பட்டவரிடம் திருப்பிக்கொடுத்தாராம். மீதி ₹3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த குமாரின் மகன் தினேஷ்(20), தனக்கு கடன் தொல்லை இருப்பதாகவும், கடனை அடைக்க ₹3 லட்சத்தை தரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து, குமார் ₹1.50 லட்சத்தை தனது மகனிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வீட்டில் வைத்துள்ளார். ஆனால் தினேஷ், மீண்டும் ₹1.50 லட்சத்தையும் தருமாறு நேற்று முன்தினம் மாலை குமாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தினேசுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறை அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்தனர். இந்நிலையில், குமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு தினேஷ், தனது நண்பர்கள் சிலருடன் வீட்டிற்குள் புகுந்து குமாரை, கட்டை மற்றும் கைகளால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த குமார் காவலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் காவலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்(20), திருமால்(25), அன்பரசன்(27) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய தினேஷின் நண்பர்கள் 3 பேரை தேடி வருகின்றனர். பணத்துக்காக தந்தையை மகனே நண்பர்களுடன் சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: