கழுகுமலை கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று துவக்கம்

கழுகுமலை, நவ. 8: தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று (8ம் தேதி) துவங்குகிறது. வரும் 13ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து கழுகாசலமூர்த்தி வள்ளி- தெய்வானை அம்பாளை எழுந்தருளச்செய்யும் பூஜைகளும் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு மேல் வள்ளி- தெய்வானையுடன் சுவாமி வீதியுலா வந்து கோயிலை வந்தடைகிறார். தொடர்ந்து திருவிழா நாட்களில்  தினமும் இரவு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாரகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும், இரவு அன்னவாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.

மறுநாள் (13ம் தேதி) காலை சுவாமி பல்லக்கிலும், வள்ளி- தெய்வானை பூஞ்சப்பரத்திலும் வீதியுலா நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு சண்முகருக்கு அர்ச்சனை வழிபாடும், மாலை 3 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் ஏந்தி வந்து 4 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 14ம் தேதி சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், 15ம் தேதி சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், தெய்வானை பூஞ்சப்பரத்திலும் வீதியுலா வந்து தபசு மண்டபத்தில் எழுந்தருளியதும் தபசுக்காட்சி நடைபெறும். 16ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 17ம் தேதி சுவாமி வள்ளி- தெய்வானையுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதியுலா மற்றும் பட்டினப்பிரவேசம் நடைபெறும். 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் சஷ்டி திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: