வேலூரில் வாடகை வீட்டில் பதுக்கிய 1.75 டன் குட்கா பறிமுதல்: ஆரணி ஏஜென்ட் கைது

வேலூர், செப். 26: வாணியம்பாடியில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேலூரில் வாடகை வீட்டில் பதுக்கிய ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஆரணி குட்கா ஏஜென்டையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு கடந்த 21ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆலங்காயம் போலீசார் வாணியம்பாடி டோல்கேட் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர் அதில் தடைசெய்யப்பட்ட ₹8 லட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா கடத்தி வந்த டிரைவர் வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த பாபு(42), சுமேந்தர்(38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

லாரியின் பின்னால் பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வாணியம்பாடி ரங்காராவ்(30) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹6 லட்சம் மதிப்புள்ள 1.75 டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரங்காராவ் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஏஜெண்டாக செயல்பட்டு ஆரணி கார்த்திகேயன் தெருவை சேர்ந்த தினேஷ்(28) என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் பட்டியல் சங்கிலி போல தொடர்வதால் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட குட்கா டீலர்கள், ஏஜென்டுகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: