சேதமடைந்த வகுப்பறைகளை சீரமைக்கக்கோரி பள்ளிக்கு பூட்டுபோட்டு மாணவர்களுடன் பெற்றோர் மறியல் அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம், செப்.21: அரக்கோணம் அருகே சேதமடைந்த வகுப்பறைகளை சீரமைக்கக்கோரி பெற்றோர் நேற்று பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 98 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.மேலும், மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது திடீர் திடீரென விழுந்து வருவதால் மாணவர்கள் பெரிதும் அச்சமடைந்து பள்ளிக்கு வந்துசென்றனர். இதனால் மற்றொரு அறையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான 98 மாணவர்களையும் அமரவைத்து பாடம் நடத்த தொடங்கினர். ஒரே வகுப்பில் அனைவருக்கும் பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவர்கள் சரிவர பாடத்தை கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில், சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் இந்த வகுப்பறையிலும் மழைநீர் கசிவு ஏற்பட தொடங்கியது. மேலும், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கிவிடுகிறது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் தொடக்கக்கல்வி அலுவலகம், மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று காலை மாணவர்களுடன் பள்ளிக்கு வந்து திடீர் முற்றுகையிட்டனர். பின்னர், பள்ளி நுழைவு வாயில் கேட்டை பூட்டிவிட்டு மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த காவேரிப்பாக்கம் துணை பிடிஓ ஜெயவேல், பாணாவரம் ஆர்ஐ எத்திராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, சேதமடைந்த பழைய வகுப்பறை கட்டிடத்தை அகற்றி அப்பகுதியில் புதிய வகுப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுத சென்றனர். பின்னர், பெற்றோர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: