இடி, மின்னல் ஏற்படும்போது கணினி, செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் மின்வாரியம் எச்சரிக்கை

கே.வி.குப்பம், செப். 21: இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது கணினி, செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் வடுகந்தாங்கல் துணை மின்நிலைய அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மழையின்போது பலத்த காற்று வீசும். அப்போது மரங்கள் முறிந்து மின்சாதனங்கள் மீது விழுந்திருக்கும். இதனால் மின்கசிவு ஏற்பட்டு வீடுகளுக்கு அருகே உள்ள இரும்பு சாதனங்கள், மரங்கள் மற்றும் மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில் தேங்கியிருக்கும் நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கும்.எனவே மழை மின்சாரக் கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் உள்ள மரங்கள் அருகே செல்லவேண்டாம். மேலும், மின்கம்பிகள் அறுந்துகிடந்தால் உடனே மின்சார வாரியத்திற்கு தகவல் தர வேண்டும். அதனை தொடவோ, மிதிக்கவோ கூடாது. வீட்டில் துணிகளை காயவைப்பதற்காக மின்கம்பங்களில் கம்பி மற்றும் கயிறுகளை கட்டக்கூடாது.கை, கால்கள் ஈரமாக இருக்கும்போது மின்சாதனங்களை இயக்க வேண்டாம்.

மேலும், மின்சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகள் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மின்னல் மற்றும் இடி ஏற்படும்போது வெட்டவெளியில் நிற்காமல், வீடுகள் அல்லது பெரிய கட்டிடங்கள் உள்ள இடத்திற்கு சென்றுவிடவேண்டும்.மேலும், திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் செல்ல வேண்டாம். இடி, மின்னலின் போது, வீட்டு உபயோக பொருட்களான டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.வீட்டில் குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் மின் சுவிட்ச் பாக்ஸ், ஒயர் போன்றவற்றை அமைக்க வேண்டும். மேலும், மின்கம்பங்களில் கால்நடைகளையோ, விளம்பர தட்டிகளையோ கட்டக் கூடாது. மழைக்காலங்களில் மின்சார கசிவுகளிலிருந்து ெபாதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: