சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

சாத்தான்குளம், செப்.19:புத்தன்தருவை, வைரவம் தருவை குளங்களுக்கு தண்ணீர் விட மறுத்த அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள புத்தன்தருவை, வைரவம் தருவை குளங்கள் நீராதாரகுளமாக விளங்குகிறது. இந்த குளங்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து  3,4வது ரீச் வழியாக   தண்ணீர் விட கேட்டும், தாமிரபரணியில் இருந்து சடையனேரி கால்வாய் வழியாக விடப்பட்ட தண்ணீரை நிறுத்தியதை கண்டித்தும் திருச்செந்தூர் தென்பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில்  சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் நாளை (20ம்தேதி)  விவசாயிகள் மறியல்   போராட்டம்  நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் தாலுகா  அலுவலகத்தில் தாசில்தார் ஞானராஜ் தலைமையில் நேற்று மாலை சமாதான கூட்டம் நடந்தது.

இதில்  இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர், தாமிரபரணி நதிநீர் பங்கீடு திட்ட உதவிப்பொறியாளர் வினோத்குமார், சாத்தான்குளம் முன்னாள் யூனியன் தலைவர்    ஆனந்தராஜ், திருச்செந்தூர் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சத்தியசீலன், திமுக விவசாயி அணி  ஒன்றிய அமைப்பாளர் டேவிட் வேதராஜ், சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி, முதலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயக்குமார், வக்கீல் வேணுகோபால் மற்றும் விவசாயிகள்  டேனியல்ராஜன், பொத்தக்காலன்விளை அந்தோணி ஜெயசீலன், அருள்ராஜ், போலையர்புரம் சுரேஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட பொத்தக்காலன்விளை, போலையர்புரம், தட்டார்மடம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில்,  கோடை காலத்தில் தண்ணீர் திறக்க சட்டத்தில் இடமில்லை என கூறி உதவி பொறியாளர் தண்ணீர் தர இயலாது என தெரிவித்தார். இதனால்  ஆத்திரமடைந்த விவசாயிகள் தாலுகா அலுவலகம்  முன்பாக தரையில் அமர்ந்து  திடீரென  போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  உடன் தாசில்தார் ஞானராஜ்,  பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் செல்பேசியில் பேசினார்.

உயர் அதிகாரிகள்  நேரில் வந்து இன்று  காலை விவசாயிகளுடன் பேசுவதாக உறுதி அளித்ததால்  போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அனைவரும்  கலைந்து சென்றனர்.

Related Stories: