தூத்துக்குடியில் பூட்டிய அறையில் அரசு பெண் ஊழியர் மர்மச்சாவு

தூத்துக்குடி, செப். 12:  தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில்  மர்மமான முறையில் இறந்து கிடந்த அரசு பெண் ஊழியர் உடலை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி  அடுத்த கோரம்பள்ளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி  தமிழ்ச்செல்வி (49). தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக  வளர்ச்சித் துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செந்தில்குமார்  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். தம்பதிக்கு குழந்தை  இல்லை. தமிழ்ச்செல்வி வளர்த்து வந்த உறவினர் மகன், வெளியூரில் தற்போது வேலை செய்து வருகிறார். இதனால் கோரம்பள்ளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்துவந்த தமிழ்ச்செல்வி, கடந்த 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளிேய வரவில்லை. வீட்டுக் கதவும் உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால்  சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குள்ள அறையில் படுக்கையில்  மர்மமான முறையில் தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தார். அவரின் முகம் பிளாஸ்டிக்  பையால் சுற்றப்பட்டு இருந்தது.இதையடுத்து உடலை கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் சம்பத்  தலைமையிலான போலீசார், பரிசோதனைக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: