குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புவனகிரி, ஆக. 14: குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், நீர்நிலைகள் தூர் வாரப்படாததை கண்டித்தும் மேலமூங்கிலடி கிராம பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேலமூங்கிலடி கிராமம். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாகவும், பல்வேறு நீர் நிலைகள் தூர் வாரப்படாததால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை என்றும், 100 நாள் வேலை சரிவர நடைபெறவில்லை எனவும் கிராம மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.இவற்றை கண்டித்து நேற்று மேலமூங்கிலடி கிராம பொதுமக்கள் சுமார் 200 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சதானந்தம் தலைமையில் திடீரென மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாத அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் குறித்து சதானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த பல மாதங்களாக மேலமூங்கிலடி கிராமத்தில் 100 நாள் வேலையும், அதற்கான கூலியும் சரியாக வழங்கப்படவில்லை. குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. பாசன வாய்க்கால் முறையாக தூர் வாராததால் தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். எனவே இந்த பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சுமார் 30 நிமிடம் நடந்த இந்த போராட்டத்தினால் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் 1லட்சம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 1982ல் கட்டப்பட்டு அதன் மூலம் அண்ணாநகர், திரு.வி.க. நகர், தாஷ்கண்ட் நகர், வீரபாண்டியன் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில  வருடங்களாக குடிநீர் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியின் உள்பகுதியில் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் இருந்து வருவதால் உள்பகுதி சேறும் சகதியுமாக உள்ளது.

இதிலிருந்து வரும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு, குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல், பணத்திற்கு கேன் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் மற்றும் தீபா பேரவை நகர தலைவர் பாரதிரெங்கன் ஆகியோர் தலைமையில் நீர்த்தேக்க தொட்டியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழமை வாய்ந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டவேண்டும். தற்போது நடைபெறும் புதுப்பிக்கும் பணியை  தடுத்து நிறுத்த வேண்டும். தொட்டியின் உள்ளே ஆளுயர அளவிற்கு தேங்கி நிற்கும் சேற்றினை அகற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த  விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால்  அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: