சேப்பாக்கத்தில் நாளை 3வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (புதன்) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டிக்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

வெவ்வேறு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டத்தில் ஆடி அதில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 2 போட்டிகளிலும் முன்வரிசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முன்னணி வீரர்களே சொதப்புவதால் நாளைய போட்டியில் அதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 2 போட்டிகளிலும் டக் அவுட் ஆனதால் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார். அவர் இந்த போட்டியில் களமிறங்கினால் தனது அதிரடியை காட்டவேண்டும்.

இதுபோல் துவக்க ஜோடியான கேப்டன் ரோஹித், சுப்மன்கில் மற்றும் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஹர்திக்பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்களும் ஜொலித்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவதோடு ஒரு நாள் போட்டிகளில் முதல் இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் 2வது போட்டியில் அசத்தினர். குறிப்பாக மிட்சல் ஸ்டார்க் இந்திய பேட்டர்களை நிலைகுலைய செய்தார். பேட்டிங்கிலும் டிராவிஸ்ஹெட், மிட்சல் மார்ஸ், லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் என சிறந்த வீரர்கள் உள்ளனர். தொடரை வெல்ல இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் நாளைய போட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: