2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். பரோடாவில் இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி கோலி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக சங்கக்காராவை முந்த 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி அந்த இலக்கை எட்டினார்.
சமீபகாலமாகவே மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் கோலி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 302 ரன்களைக் குவித்த கையோடு, விஜய் ஹசாரே கோப்பையிலும் டெல்லி அணிக்காக ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதே வேகத்தை இன்றும் தொடர்ந்த அவர், 28,000 சர்வதேச ரன்களை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (624 இன்னிங்ஸ்) கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸ்களிலும், சங்கக்காரா 666 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டியிருந்தனர்.
தொடக்கத்தில் அதிரடி காட்டிய விராட், பின்னர் சுப்மன் கில்லுடன் இணைந்து நிதானமாக ரன்களைச் சேர்த்து, 44 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்து சதமடிக்கும் நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விராட் கோலி அவுட் ஆனார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்து கோலி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு முன்னால் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 27,483 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் மற்றும் 25,957 ரன்கள் எடுத்த மஹேல ஜெயவர்த்தனே ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
