ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ்: எலினா சாம்பியன்; போராடி தோற்றார் ஸியு

ஆக்லாந்து: ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக்கை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் சீன வீராங்கனை வாங் ஸியு, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினா – வாங் ஸியு மோதினர். துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய எலினா முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் சளைக்காமல் மோதி புள்ளிகளை பெற்றனர். டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை கடைசியில் 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் எலினா கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Related Stories: