அகமதாபாத் டெஸ்ட் டிராவில் முடிந்தது: ஹெட் - லாபுஷேன் உறுதியான ஆட்டம்; 2-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. பார்டர் - கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துக்கொண்ட இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் கோப்பையை தக்கவைத்து அசத்தியது. இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன் குவிக்க (கவாஜா 180, கிரீன் 114), இந்தியா 571 ரன் குவித்து பதிலடி கொடுத்தது (கில் 128, கோஹ்லி 186, அக்சர் 79). இதைத் தொடர்ந்து, 91 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. காயம் காரணமாக கவாஜா களமிறங்கவில்லை.

குனேமன் 0, ஹெட் 3 ரன்னுடன் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். குனேமன் 6 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் வெளியேற, இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், ஹெட் - லாபுஷேன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 139 ரன் சேர்த்தது. ஹெட் 90 ரன் (163 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலியா 78.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்திருந்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது. லாபுஷேன் 63 ரன் (213 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் ஸ்மித் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் 186 ரன் விளாசிய கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை இந்திய ஆல் ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா பகிர்ந்துகொண்டனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் வரும் 17ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி விசாகப்பட்டணத்திலும் (மார்ச் 19), 3வது மற்றும் கடைசி ஒருநாள் சென்னையிலும் (மார்ச் 22) நடக்க உள்ளன.

Related Stories: