கோஹ்லி 186, அக்சர் 79 ரன் விளாசல் இந்தியா 571 ரன் குவித்தது: இன்று கடைசி நாள் விறுவிறு...

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 571 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கடைசி நாளான இன்று இந்தியா வெற்றியை வசப்படுத்துமா? இல்லை... ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி டிரா செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கவாஜா 180 ரன், கிரீன் 114 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்தது. ரோகித் 35, புஜாரா 42, கில் 128 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி 59 ரன், ஜடேஜா 16 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜடேஜா 28 ரன் எடுத்து மர்பி சுழலில் நடையை கட்ட, கோஹ்லி - பரத் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்தது. கர் பரத் 44 ரன் (88 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்சர் படேல் அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகமெடுத்தது. பொறுப்புடன் விளையாடிய கோஹ்லி 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் சதம் விளாசி ரசிகர்களின் பாராட்டுதல்களை அள்ளினார். மறு முனையில் அக்சர் அரை சதம் அடித்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்து இந்திய அணி முன்னிலை பெற உதவினர். அக்சர் படேல் 79 ரன் (113 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த அஷ்வின் 7 ரன்னில் ஆட்டமிழக்க, உமேஷ் யாதவ் டக் அவுட்டானார் (ரன் அவுட்). கோஹ்லி 186 ரன் (364 பந்து, 15 பவுண்டரி) விளாசி மர்பி சுழலில் லாபுஷேன் வசம் பிடிபட, இந்தியா முதல் இன்னிங்சில் 571 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷ்ரேயாஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் லயன், மர்பி தலா 3, ஸ்டார்க், குனேமன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  இதைத் தொடர்ந்து, 91 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. குனேமன் 0, ஹெட் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: