மேத்யூஸ் சதம் விளாசல் இலங்கை 302 ரன்னில் ஆல்அவுட்: நியூசிலாந்துக்கு 285 ரன் இலக்கு

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன் எடுத்தது.  நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 107.3 ஓவர்களில் 373 ரன்னில் ஆல்அவுட் ஆகி 18 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 102, மேட் ஹென்றி 72 ரன் அடித்தனர். பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில், கேப்டன் கருணாரத்னே 17, ஒஷடா பெர்னாண்டோ 28, குசல் மென்டிஸ் 14 ரன்னில் அவுட் ஆகினர். நேற்றைய 3ம்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன் எடுத்திருந்தது.

4வது நாளான இன்று பிரபாத் ஜெயசூர்யா 6 ரன்னில் வெளியேற, ஏஞ்சலோமேத்யூஸ்-  சண்டிமால் 5வது விக்கெட்டிற்கு 105 ரன் சேர்த்தனர். சண்டிமாால் 42 ரன்னில் சவுத்தி பந்தில் போல்டானார். மேத்யூஸ் டெஸ்ட்டில் தனது 14வது சதத்தை விளாசினார். இவர் 115 ரன்னில் ஹென்றி பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த டிக்வெல்லா ரன் எதுவும் எடுக்காமலும், கசுன் ராஜிதா 14, லகிருகுமாரா 14 ரன்னிலும் அவுட் ஆகினர். 105.3 ஓவரில் 302 ரன்னுக்கு இலங்கை ஆல்அவுட் ஆனது. தனஞ்செயா 47 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து பவுலிங்கில் பிளேர் டிக்னர், மேட் ஹென்றி 3, சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 285 ரன் இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில்  டெவோன் கான்வே 5 ரன்னில் அவுட் ஆனார். 6 ஓவரில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன் எடுத்திருந்தது.

Related Stories: