கிறைஸ்ட்சர்ச்: ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடக்கும் இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், டாஸ் வென்ற நியூசி. முதலில் பந்துவீசிய நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன் குவித்தது (92.4 ஓவர்). அடுத்து களமிறங்கிய நியூசி. 2வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து திணறியது. டேரில் மிட்செல் 40, பிரேஸ்வெல் 9 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். கிட்டதட்ட 200 ரன் பின்தங்கிய நிலையில் இருந்த நியூசி.யை எளிதில் சுருட்டிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை வீரர்கள் பந்துவீசினர். பிரேஸ்வெல், கேப்டன் சவுத்தீ தலா 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப... நியூசி. 235 ரன்னுக்கு 7வது விக்கெட்டை பறிகொடுத்தது. எனினும் பொறுப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய மிட்செல் தனது 5வது சதத்தை விளாசி நம்பிக்கை அளித்தார். அவர் 102 ரன் எடுத்து லாகிரு குமாரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா வசம் பிடிபட்டார்.
