அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்துள்ளது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 180 ரன், கேமரூன் கிரீன் 114 ரன், லயன் 34, மர்பி 41, ஹெட் 32 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஷமி 2, ஜடேஜா, அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் 17 ரன், ஷுப்மன் கில் 18 ரன்னுடன் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ஓவரில் 74 ரன் சேர்த்தது. ரோகித் 35 ரன் எடுத்து குனேமன் சுழலில் லாபுஷேன் வசம் பிடிபட்டார்.
அடுத்து கில் உடன் புஜாரா இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது. கில் 90 பந்தில் அரை சதம் அடிக்க, புஜாரா 42 ரன் எடுத்து (121 பந்து, 3 பவுண்டரி) மர்பி சுழலில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து கில் - கோஹ்லி ஜோடி ரன் குவிப்பை தொடர்ந்தது. அபாரமாக விளையாடிய கில் டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். அவர் 128 ரன் (235 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி லயன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த ஜடேஜா நிதானமாக விளையாடி கம்பெனி கொடுக்க, கோஹ்லி ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு டெஸ்டில் அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பினார். 3ம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்துள்ளது. கோஹ்லி 59 ரன், ஜடேஜா 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இன்னும் 191 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா இன்று 4ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது.
* 4000 கடந்த 5வது வீரர்! சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமை விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. அகமதாபாத் போட்டி, இந்தியாவில் அவர் விளையாடும் 50வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் 94 டெஸ்டில் 7216 ரன், டிராவிட் 70 டெஸ்டில் 5598 ரன், கவாஸ்கர் 65 டெஸ்டில் 5067 ரன், சேவக் 52 டெஸ்டில் 4656 ரன் குவித்து முதல் 4 இடங்களில் உள்ளனர்.* ஜன. 2022க்கு பிறகு கோஹ்லி அடித்த முதல் அரை சதம் இது. கடைசியாக விளையாடிய 15 இன்னிங்சில் அரை சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்த அவர், அகமதாபாத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.* டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி தனது 29வது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.* சூப்பர் பார்மில் உள்ள கில் இந்த ஆண்டில் தனது 5வது சர்வதேச சதத்தை பதிவு செய்துள்ளார்.* சர்வதேச போட்டிகளில் 17,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரர் என்ற சாதனை கேப்டன் ரோகித் வசமாகி உள்ளது. சச்சின், டிராவிட், கங்குலி, தோனி, கோஹ்லி ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.