மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை: நாளை வலிய படுக்கை பூஜை

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில்  பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக  நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின்  மாசிக்கொடை விழா கடந்த 5 ம் தேதி காலை  திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) 5   ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.

5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15  மணிக்கு மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் இருந்து  யானைமீது சந்தன குடம் பவனி  புறப்பட்டு மண்டைக்காடு கோயில் வந்தடைதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடக்கிறது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணி முதல் 10 மணிவரை பக்தி பஜனை, 10 மணி முதல் 11.மணிவரை பெரியபுராணம் தொடர் விளக்கவுரை ஆகியவை நடந்தது. 11.மணிமுதல் பிற்பகல் 2  மணிவரை பொருளாளர் சசீதரன் தலைமையில் சமய மாநாடு, பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை  மாபெரும் சிந்தனை சொல்லங்கம், மாலை 4 மணி முதல் 6 மணிவரை இசைச்சொற்பொழிவு இரவு 7 மணிவரை நாட்டிய நிகழ்ச்சி, 6 மணிமுதல் 7.30 வரை பரத நாட்டியம், 7.30 மணிமுதல் 10.30  மணிவரை சமய மாநாடு ஆகியவை நடக்கிறது.

நாளை வலியபடுக்கை பூஜை

6ம் நாள்  நாளை (வெள்ளிக்கிழமை) மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவு வேளை அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு, கனி வகைகள்,இனிப்பு போன்ற பதார்த்தங்களை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து வழிபடுவதாகும். இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6 ம் நாளன்றும், மீன பரணிக்கொடை அன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் வருடத்திற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. பக்தர்கள் நள்ளிரவுவரை காத்திருந்து இந்த வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வர். வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

சந்தனக்குட ஊர்வலம் இன்று புறப்பாடு

மார்த்தாண்டம்: உண்ணாமலைகடை பகுதியில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சந்தனக்குட ஊர்வலம் இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக பூதத்தான் கோயிலில் இருந்து சந்தனம், களபம், குங்குமம் ஆகியவற்றை குடங்களில் நிரப்பினர். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் குடத்தை சுமந்தபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் திக்குறிச்சி, சிராயங்குழி, திருவிதாங்கோடு, திங்கள்சந்தை வழியாக நாளை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை சென்றடையும். இந்த ஊர்வலத்தில் சந்தனக்குடம் ஏந்தி செல்லும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் தீபாராதனை எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விஸ்வநாதன் என்பவரின் தலைமையில் செயலாளர் ஐயப்பன், பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் பக்தர்களை ஒருங்கிணைத்து ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: