கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: முதல்நாளில் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவிகள் வருகை

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. காலையில் இறை வணக்கத்துடன் வகுப்பு தொடங்கியது. முதல்நாளில் பள்ளிகளுக்கு சுமார் 80 லட்சம் மாணவ, மாணவியர் வந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டான 2024-25ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 6ம் தேதி தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி 6ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டது.

முதல்நாளிலேயே அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகம், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முழுமையான பாடப்புத்தகங்கள் அச்சிட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து பள்ளிகளுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல சீருடை, விலையில்லா நோட்டுகள், காலணிகளும் விநியோகம் செய்யப்பட்டு, பள்ளி திறக்கும் நாளான நேற்று முறைப்படி மாணவ, மாணவிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் அதிகரித்த வெப்ப அலையின் காரணமாக தமிழ்நாட்டிலும் வெப்ப அலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, ஜூன் 10ம் தேதி (நேற்று) பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தது. இதையடுத்து கடந்த வாரம் முதல் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் நடந்தன. குடிநீர், கழிப்பறை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று காலை 9 மணி அளவில் 37 ஆயிரத்து 576 அரசு பள்ளிகளும், பிற வகை பள்ளிகளும் திறக்கப்பட்டு, இறை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்கின. முதல் நாளான நேற்ற தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். முதல்நாளே ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் என சுமார் 6 கோடியே 50 லட்சம் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அத்துடன் சீருடை, காலணிகள், நோட்டுகள், உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமையும் சென்னையில் தொடங்கி வைத்து ஆய்வுகள் மேற்கொண்டார். முன்னதாக பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பூக்களை கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். புதியதாக பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு மேளதாளத்துடன் சில ஊர்களில் வரவேற்புகள் அளிக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முதல் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வந்தனர். பல்வேறு பள்ளிகளில் நேற்று முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது.

* “இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்”
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: முதல்நாளில் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவிகள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: