புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ள ஆவின் நிறுவனம்: கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்; அதிகாரிகள் தகவல்

சென்னை: கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க, புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமை கன்றுகளை ஆவின் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் ஆவின் பால் தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. ஆவின் பால் நிர்வாகம் தமிழகத்தில் 4 வகையான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருள்களான நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பன்னீர் வகைகளை 10,000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மக்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் காலத்திற்கேற்ப மற்றும் மக்களின் விருப்பத்தை அறிந்து பால் உபபொருள்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை கடந்த 2007ம் ஆண்டு 11.8 லட்சமும், 2019ம் ஆண்டு கணக்கின்படி 5.19 லட்சமாகவும் குறைந்துள்ளது. ஆனால் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ரூ.8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளிலிருந்து 2000 எருமைக் கன்றுகளை தத்தெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் வெப்ப நிலைகளால் ஏற்படும் பிரச்னைகளால் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எருமை மாடுகள் வளர்க்கும் செலவை சமாளிக்க முடியாத விவசாயிகளுக்கு கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும். இந்த புதிய திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி மேம்படுத்தப்படும். மேலும் கன்று வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ள ஆவின் நிறுவனம்: கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: