இடியுடன் கூடிய திடீர் மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்ட 9 விமானங்கள்: பயணிகள் அவதி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய திடீர் மழையால் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் வானில் வட்டமிட்டன. 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு, வானம் இருண்டது. அதோடு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னல் அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் கோவை, பெங்களூரு, டெல்லி, பாட்னா, கொல்கத்தா, மும்பை, சிலிகுரி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 9 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்தன. சுமார் 15 நிமிடங்களில் மழை ஓய்ந்ததும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரை இறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இலங்கை, ஜெட்டா, ராஞ்சி, விசாகப்பட்டினம், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கோவை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. திடீர் மழை, சூறைக்காற்று, இடி, மின்னல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 19 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post இடியுடன் கூடிய திடீர் மழையால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்ட 9 விமானங்கள்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: