புதிதாக விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

சென்னை: புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 2017ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றி வழங்கப்பட்டன. இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வேளையில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்துக் கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது. தற்போது 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கார்டு விரைவில் கிடைக்கும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் அங்கு மட்டும் ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

The post புதிதாக விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவு பொருள் வழங்கல் துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: