இங்கிலாந்துடன் 3வது ஒருநாள் போட்டி வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி

சட்டோகிராம்: இங்கிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 48.5 ஓவரில் 246 ரன் குவித்தது. நஜ்முல் உசேன் 53, முஷ்பிகுர் ரகிம் 70, ஷாகிப் அல் ஹசன் 75 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 3, சாம் கரன், அடில் ரஷித் தலா 2, கிறிஸ் வோக்ஸ், ரெஹான் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 43.1 ஓவரில் 196 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பில் சால்ட் 35, ஜேம்ஸ் வின்ஸ் 38, சாம் கரன் 23, கேப்டன் பட்லர் 26, கிறிஸ் வோக்ஸ் 34 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் 4, தைஜுல் இஸ்லாம், எபாதத் உசேன் தலா 2, முஸ்டாபிசுர் ரகுமான், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேசம் 50 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளிலும் ஏற்கனவே வென்றிருந்த இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகன் விருதும், இங்கிலாந்தின் அடில் ரஷித் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: