60 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்: ஷபாலி,நோரிஸ் அமர்க்களம்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் 2வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 60 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா முதலில் பந்துவீச முடிவு செய்தார். டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லான்னிங், ஷபாலி வர்மா களமிறங்கினர். அதிரடியாக விளையாடி ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்த இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 162 ரன் சேர்த்தது. மெக் லான்னிங் 72 ரன் (43 பந்து, 14 பவுண்டரி), ஷபாலி 84 ரன் (45 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஹீதர் நைட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மரிஸன்னே காப், ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியைத் தொடர டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. காப் 39 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ரோட்ரிக்ஸ் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி மகளிர் அணி களமிறங்கியது. கேப்டன் மந்தனா, சோபி டிவைன் இருவரும் துரத்தலை தொடங்கினர். சோபி 14 ரன், மந்தனா 35 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கேப்சி பந்துவீச்சில் வெளியேறினர். அடுத்து வந்த வீராங்கனைகளில் எல்லிஸ் பெர்ரி 31 ரன், ஹீதர் நைட் 34 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மேகான் ஷுட் 30* ரன் எடுக்க, மற்றவர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் மட்டுமே எடுத்து 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சில் டாரா நோரிஸ் 4 ஓவரில் 29 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றினார். கேப்சி 2, ஷிகா பாண்டே 1 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. நோரிஸ் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

Related Stories: