முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா

ஹூஸ்டன்: வங்கதேச அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், அமெரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள பிரெய்ரி வியூ கிரிக்கெட் வளாக மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. தவ்ஹித் ஹ்ரிதய் அதிகபட்சமாக 58 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மகமதுல்லா 31, சவும்ய சர்கார் 20, லிட்டன் தாஸ் 14 ரன் எடுத்தனர். அமெரிக்க பந்துவீச்சில் ஸ்டீவன் டெய்லர் 2, ஜஸ்தீப் சிங், அலி கான், சவுரவ் நேத்ரவாக்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அமெரிக்கா 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து வென்றது. ஸ்டீவன் டெய்லர் 28, கவுஸ் 23 ரன் எடுத்தனர்.

அமெரிகாவுக்காக விளையாடும் நியூசிலாந்து முன்னாள் நட்சத்திரம் கோரி ஆண்டர்சன் 34 ரன், மும்பையில் பிறந்த ஹர்மீத் சிங் 33 ரன்னுடன் (13 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் 2, ஷோரிபுல், ரிஷத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிரடியாக 13 பந்தில் 33 ரன் விளாசிய ஹர்மீத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்துக்கு எதிராக அமெரிக்க அணி பெற்ற வெற்றி, மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

The post முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: