ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோதும். சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் முதல் முறையாக இரு அணிகளும் மோத உள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி நடப்புத் தொடரில் அதிக ரன் குவிக்கும் அதிரடி அணியாக இருக்கிறது. முதல் தகுதிச் சுற்றிலேயே வென்று நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு அதிரடியாக ரன் குவிக்கும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாஸன் ஆகியோருடன், நடராஜன், வியாஸ்காந்த், திரிபாதி, நிதிஷ் ரெட்டி தங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே கொல்கத்தாவிடம் விட்டதை பிடிக்க இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் மீண்டும் அதிரடியில் இறங்கும். கூடவே இறுதி ஆட்டத்துக்கு முன்னேற கூடுதல் முனைப்பு கூட்டும். அதே வேகத்தில் இருக்கிறது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான். அந்த அணி நடப்புத் தொடரில் முதல் 2இடங்களில் ஒன்றை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் தடுமாறியது. ஆனாலும் ஏற்கனவே கிடைத்த வெற்றிகள் மூலம் 3வது இடம் உறுதியானது.

அதனால் கிடைத்த வாய்ப்பால், நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியை சுவைத்துள்ளது. ஏப்.27ம் தேதி லக்னோவை வீழ்த்திய பிறகு வெற்றி கிடைத்துள்ளது. அதாவது ராஜஸ்தானுக்கு மே மாதத்தில் கிடைத்த ஒரே வெற்றி இதுதான் அதன் மூலம் தகுதிச் சுற்று 2ல் இன்று விளையாட இருக்கிறது. ஜோஸ் பட்லர் இல்லாதது பின்னடைவாக இல்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் யாஷ்வி, ரியான், டாம், ஹெட்மயர், அஷ்வின், சாஹல் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடக் கூடும்.அஷ்வின், நடராஜன் இருவருக்கும் சொந்தக்களம் சென்னை. அதனால் மற்றவர்களை விட இருவருக்கும் பொறுப்பு அதிகம். எப்படி இருந்தாலும் இரு அணிகளும் ‘பைனல்’ இலக்கில் வேகம் காட்டும். அதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

The post ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: