மகளிர் பிரிமியர் லீக் டி20 : இன்று கோலாகல தொடக்கம்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசன், வண்ணமயமான தொடக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் போல, மகளிருக்கான டி20 தொடரையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், 2018ல்  முதல் முறையாக ஐபிஎல் நாக் அவுட் சுற்றுக்கு  இடையே கிடைக்கும் ஓய்வு நாட்களில்  3 அணிகள் மோதும் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டி நடத்தப்பட்டது. மிதாலி தலைமையில் வெலாசிட்டி, மந்தானா தலைமையில் டிரெய்ல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் தலைமையில் சூப்பர்நோவாஸ் என 3 அணிகள் அந்த போட்டியில் களமிறங்கின.

இந்நிலையில், மகளிர் டி20 தொடர் 2023ல் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி உறுதி செய்தார். இதில் பங்கேற்கும் 5 அணிகளின் உரிமம் பெறுவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்தது. இதன் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.4,669 கோடி வருவாய் கிடைத்தது. 8 ஆண்கள் அணிகளுக்கான முதல் ஏலத்தில் கிடைத்த தொகையை விட இது அதிகமாகும். ஏற்கனவே ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், மகளிர் அணிகளுக்கான உரிமத்தையும் ஏலம் எடுத்துள்ளன.

இந்த அணிகள் அதே பெயரில் களமிறங்கும் நிலையில், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்த அணிக்கு உ.பி. வாரியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு வீராங்கனைகளை தேர்வு செய்தற்கான ஏலம், கடந்த மாதம் மும்பையில்  நடந்தது. இதைத் தொடர்ந்து மகளிர் பிரிமியர் லீக் என பெயரிடப்பட்ட இந்த தொடரின் முதலாவது சீசனுக்கான அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நவி மும்பை, டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்க உள்ள பிரமாண்ட தொடக்க விழாவை தொடர்ந்து, இறவு 7.30க்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதுகின்றன. மார்ச் 21 வரை மொத்தம் 19 லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும். எலிமினேட்டர் ஆட்டம் மார்ச் 24ம் தேதியும், மார்ச் 26ல் பைனலும் நடைபெற உள்ளன. எல்லா ஆட்டங்களும் மும்பையில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கும். மார்ச் 5,  18ல் தலா 2 ஆட்டங்கள் (மாலை 3.30, இரவு 7.30) நடக்க உள்ளன.

Related Stories: