ஜூனியர் உலக கோப்பை கபடி காலிறுதியில் இந்தியா

ஊர்மியா: ஈரானில் உள்ள ஊர்மியாவில் 2வது ஜூனியர் ஆடவர் உலக கோப்பை கபடிப் போட்டி நடக்கிறது. மேலும் 2019ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் சர்வதேச கபடிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பாலஸ்தீனம், ஈரான், ஈராக், துருக்கி, ஜார்ஜியா, தைவான், தாய்லாந்து, நேபாளம், கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இவற்றில் இந்திய அணி இடம் பெற்ற சி பிரிவில் வங்கதேசம், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றன. லீக் சுற்றில் இந்தியா அணி, தாய்லாந்து அணியை 67-34 என்ற புள்ளிகள் கணக்கிலும், வங்கதேசத்தை 74-23 என்ற புள்ளிக் கணக்கிலும்  வீழ்த்தியது. எனவே சி பிரிவில் முதல் இடம் பிடித்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெறும் கடைசி காலிறுதியில் தைவான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. அதேபோல் மற்ற 3 காலிறுதிகளில் ஈராக்-நேபாளம், ஈரான்-வங்கதேசம், பாகிஸ்தான்-கென்யா ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

இந்திய அணி: நரேந்தர் கண்டோலா, அங்குஷ் ரத்தி, ஜெய் பகவான், மஞ்சித் சர்மா, சாகர் குமார், ஆஷிஷ் மாலிக், சச்சின், ரோகித் குமார், மனு தேஷ்வால், அபிஜித் மாலிக், விஜயந்த் ஜாக்லன், யோகேஷ் தஹியா பயிற்சியாளர்கள்: அனுப் குமார், சஞ்சீவ் பலியான்.

Related Stories: