திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். ஆன்மிக சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
