குனேமன், லயன் அபார பந்துவீச்சு 109 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜடேஜா சுழலில் ஆஸி. திணறல் ஒரே நாளில் 14 விக்கெட் சரிந்தது

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது. ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், முகமது ஷமிக்கு பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கம்மின்ஸ், ரென்ஷா இடத்தில் ஸ்டார்க், கிரீன் சேர்க்கப்பட்டனர்.

ரோகித், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஸ்டார்க் - கிரீன் வேகக் கூட்டணி பந்துவீச்சை தொடங்கினாலும், சில ஓவர்களிலேயே ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த ஆஸி. கேப்டன் ஸ்மித் வியூகத்தை மாற்றினார். ஸ்பின்னர்கள் குனேமன், லயன், மர்பியை அவர் பந்துவீசப் பணிக்க, அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ரோகித் 12, கில் 21, புஜாரா 1, ஜடேஜா 4 ரன்னில் வெளியேற... ஷ்ரேயாஸ் டக் அவுட்டானார். இந்தியா 11.2 ஓவரில் 45 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கோஹ்லி - பரத் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 25 ரன் சேர்த்தனர். கோஹ்லி 22 ரன், பரத் 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அஷ்வின் 3 ரன் எடுத்து குனேமன் சுழலில் விக்கெட் கீப்பர் கேரி வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய உமேஷ் 17 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குனேமன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாக, இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது (33.2 ஓவர்). அக்சர் படேல் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் குனேமன் 9 ஓவரில் 2 மெய்டன் உள்பட 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். லயன் 3, மர்பி 1 விக்கெட் வீழ்த்தினர்.  இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹெட், கவாஜா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்தியா எடுத்த எடுப்பிலேயே சுழல் தாக்குதலை முன்னெடுத்தது. ஹெட் 9 ரன் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், கவாஜா - லாபுஷேன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்க்க, ஆஸ்திரேலியா 100 ரன்னை கடந்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர்.

லாபுஷேன் 31 ரன் (91 பந்து, 1 பவுண்டரி), கவாஜா 60 ரன் (147 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்மித்தும் 26 ரன் எடுத்து (38 பந்து, 4 பவுண்டரி) ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன், கிரீன் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஜடேஜா 24 ஓவரில் 6 மெய்டன் உள்பட 63 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கை வசம் 6 விக்கெட் இருக்க, ஆஸ்திரேலியா 47 ரன் முன்னிலையுடன் இன்று 2வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது. முதல் நாளிலேயே 14 விக்கெட் சரிந்ததால், இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Related Stories: