வில்லியம்சன் 26வது சதம் விளாசல்: நியூசிலாந்து 483 ரன்னுக்கு ஆல்அவுட்

வெல்லிங்டன்: நியூசிலாந்து-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து 8 விக்கெட் 435 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து, 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து பவுலிங்கில் ஸ்டூவர்ட் பிராட் 4, ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. தொடக்க வீரர்கள் கான்வே 61, டாம் லாதம் 83 ரன் எடுத்து அவுட் ஆகினர். நேற்றைய 3வதுநாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் 25, நிக்கோலஸ் 18ரன்னில் களத்தில் இருந்தனர்.

4வது நாளான இன்று நிக்கோலஸ் 29 ரன்னில் ராபின்சன் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டேரி மிட்செல், 54 பந்தில் 54 ரன் அடித்த நிலையில் பிராட் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் -டாம் ப்ளன்டெல் சிறப்பாக ஆடினர். வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை விளாசினார். மேலும் ரேஸ் டெய்லரை முந்தி (7683 ரன்) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 92வது டெஸ்ட்டில் ஆடும் வில்லியம்சன் 7787 ரன் அடித்துள்ளார்.

தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 429 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும், வில்லியம்சன் 132 ரன் எடுத்திருந்த போது ஹாரி புரூக் பந்தில் கேட்ச் ஆனார். ப்ளன்டெல் 90 ரன்னில் வெளியேற பின்னர் வந்த பிரேஸ்வெல் 8, சவுத்தி 2 ரன்னில் அவுட் ஆகினர். 162.3 ஓவரில் 483 ரன்னுக்கு நியூசிலாந்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து பவுலிங்கில் ஜாக் லீச் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 258 ரன் இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

Related Stories: