வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சையும் தொடர்ந்து விளையாடும் நியூசிலாந்து 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஹாரி புரூக் - ஜோ ரூட் ஜோடியின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புரூக் 186 ரன், ரூட் 153* ரன் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 2வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது. டாம் பிளண்டெல் 25 ரன், கேப்டன் டிம் சவுத்தீ 23 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. டி20 போல பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட சவுத்தீ 73 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.
பிளண்டெல் 38, மேத்யூ ஹென்றி 6 ரன்னில் வெளியேற, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (53.2 ஓவர்). இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், லீச் தலா 3 விக்கெட், ஸ்டூவர்ட் பிராடு 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 226 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி, 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் டாம் லாதம், டிவோன் கான்வே இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 149 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கான்வே 61 ரன் (155 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), லாதம் 83 ரன் (172 பந்து, 11 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். வில் யங் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். நியூசிலாந்து 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்துள்ளது (83 ஓவர்). கேன் வில்லியம்சன் 25 ரன், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இன்னும் 24 ரன் பின்தங்கியுள்ள நியூசிலாந்து இன்று 4ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது.