சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்!!

மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக மார்க்ரம் இருந்துள்ளார்.

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஐபிஎல் 2023 மினி ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட 10 அணிகளின் நிர்வாகங்கள் பங்கேற்றன.

இந்த ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.18.50 கோடிக்கு இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13. 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதே போல் மாயங்க் அகர்வால்(ரூ. 8.25 கோடி), ஆதில் ரஷீத் (ரூ. 2 கோடி), ஹென்றிச் கிளாசன்(ரூ. 5.25 கோடி), விவராந்த் ஷர்மா(ரூ. 2.6 கோடி) உள்ளிட்ட பல வீரர்களை ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணி, அணியின் கேப்டனை அறிவிக்காமல் இருந்த நிலையில் இன்று எய்டன் மார்க்ரம்-ஐ அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது. இவர் தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார். தற்போது நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: