மகளிர் உலக கோப்பை டி.20 தொடர்: வங்கதேசத்தை பந்தாடி அரையிறுதிக்கு தென்ஆப்ரிக்கா தகுதி.! நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேற்றம்

கேப்டவுன்: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் ஆடின. இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு கேப்டவுனில் தொடங்கி நடந்த கடைசி மற்றும் 20வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் போட்டியை நடத்தும் தென்ஆப்ரிக்கா-வங்கதேசத்துடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30, சோபனா மோஸ்தரி 27 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் லாவ்ரா வோல்வார்ட் 66 (56 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), டாஸ்மின் பிரிட்ஸ் 50 (51 பந்து, 4 பவுண்டரி) ரன் அடித்தனர்.

லாவ்ரா வோல்வார்ட் ஆட்டநாயகி விருது பெற்றார். 4வது போட்டியில் 2வது வெற்றியை பெற்ற தென்ஆப்ரிக்கா குரூப் 1 பிரிவில் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்தது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 2 வெற்றியை பெற்ற போதிலும் ரன் ரேட்டில் பின் தங்கியதால் அரையிறுதிவாய்ப்பை இழந்தது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு  ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. வங்கதேசம் 4 போட்டியிலும் தோற்று கடைசி இடத்துடன் நடையை கட்டியது.  முன்னதாக குரூப் 2 பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 114 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குரூப் 2 பிரிவில்  4 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து முதலிடத்தையும், 3 வெற்றிகளை பெற்ற இந்தியா 2வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெளியேறின.

அரையிறுதியில் நாளை இந்தியா-ஆஸி மோதல்

லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. கேப்டவுனில் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது. நாளை மறுநாள் நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து-தென்ஆப்ரிக்க அணிகள் மோத உள்ளன.

Related Stories: