சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 2வது சுற்றில் மெட்ஜெடோவிச்: ஜான் போர்க் மகன் வெளியேறினார்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் தொடரான சென்னை ஓபன்  டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செர்பிய வீரர் ஹமத் மெட்ஜெடோவிச் தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஸ்வீடன் முன்னாள் நட்சத்திரம் ஜான் போர்கின் மகன் லியோ போர்க் (19 வயது, 511வது ரேங்க்) உடன் மோதிய மெட்ஜேடோவிச் (19வயது, 261வது ரேங்க்) 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த லியோ போர்க் 6-4 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.

எனினும், 3வது செட்டில் அதிரடியாக விளையாடி லியோவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த மெட்ஜெடோவிச் 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 51 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னாள் நம்பர் 1 வீரரும், பிரெஞ்ச் ஓபனில் 6 மற்றும் விம்பிள்டனில் தொடர்ச்சியாக 5 என மொத்தம் 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜான் போர்க், தனது மகனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்னை வந்துள்ளார்.

கேலரியில் அமர்ந்து லியோவை ஊக்குவித்த இருவரும், அவர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும் 2வது செட்டில் கடுமையாகப் போராடி முழு திறமையையும் வெளிப்படுத்தியதில் திருப்தி அடைந்தனர். இந்த போட்டியில், லியோவுக்கு ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுமித் நாகல் முன்னேற்றம்: பிரிட்டன் வீரர் ரயன் பெனிஸ்டனுடன் (27 வயது, 147வது ரேங்க்) நேற்று மோதிய இந்திய வீரர் சுமித் நாகல் (25 வயது, 506வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* சென்னையில் வெயில் மண்டையை பிளக்க,  வெளிநாட்டு வீரர்கள் மயங்கி விழாத குறையாக தவித்து வருகின்றனர்.

* ஹமத்-லியோ இடையிலான ஆட்டத்தின்போது இருவரும் தலா 4 முறை தங்கள் சீருடைகளை மாற்றிக் கொண்டனர். காரணம் அவை வியர்வையில் தொப்பலாக நனைந்ததுதான் காரணம்.

* அதிலும் ஹமத் 2வது செட்  முடிந்தபோது அதிக வியர்வை வெளியேறியதால் சோர்வடைந்து தள்ளாட்டத்துக்கு உள்ளானார். அதனால் அரங்கில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரை கவனித்து சரி செய்து மீண்டும் களத்துக்கு அனுப்பினர். வந்தவர் 3வது செட்டையும், ஆட்டத்தையும் வென்றார்.

Related Stories: