கோவை நீதிமன்றம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை கொலையாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்: 7 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்

கோவை: கோவை நீதிமன்றம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தப்ப முயன்ற 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (25). கூலித்தொழிலாளி மற்றும் ரவுடி. இவர் மீது பல்வேறு அடிதடி, மோதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2021 டிசம்பர் 20-ம் தேதி இரவு ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22) கொலை செய்யப்பட்ட வழக்கில், கோகுல் முக்கிய குற்றவாளியாக இருந்தார். ஸ்ரீராமின் கூட்டாளிகள், கோகுலை பழிவாங்க திட்டமிட்டு காத்திருந்தனர்.

கோவை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் காலை அடிதடி, மோதல் வழக்கில் ஜாமீன்  கையெழுத்து போட்டுவிட்டு, நண்பர் மனோஜுடன் (25) வெளியே கோபாலபுரம் 2வது வீதியில் நடந்து சென்றபோது, ஒரு கும்பல் இடைமறித்து, வெட்டித்தள்ளியது. இதில் அதே இடத்தில் கோகுல் உயிரிழந்தார். மனோஜ் காயத்துடன் தப்பினார். கொலையாளிகள் தப்பிச்சென்ற வாகன பதிவு எண் மூலம் ரேஸ்கோர்ஸ் போலீசார் துப்பு  துலக்கினர். இதில், கொலையாளிகள் மேட்டுப்பாளையம் ரோட்டில் தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் தனிப்படையினர், பின் தொடர்ந்தனர். கொலையாளிகளில் ஒருவரது செல்போன் சிக்னல் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருப்பதாக காட்டியது. போலீசார் அங்கே சென்றபோது அவர்கள், நீலகிரி ரோட்டில் சென்றது தெரியவந்தது. இப்படி மாறி, மாறி சுற்றிய கொலையாளிகள், கோத்தகிரியில் போலீசிடம் சிக்கினர். போலீசார் 7 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஹரி கவுதம் (25), பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரி தில்லை நகர் அருண்குமார் (21), ரத்தினபுரி சம்பத் வீதி சூர்யா (23), சாஸ்திரி நகர் டேனியல் (27) என தெரியவந்தது. 7 பேரையும் போலீசார் கைது  செய்தனர். இவர்களை வேனில் ஏற்றி நேற்று மாலை கோவை அழைத்து  வந்துகொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் வாந்தி, மயக்கம் வருகிறது என போலீசாரிடம் கூறினர்.  

போலீசார் முதலில் வாகனத்தை நிறுத்த மறுத்தனர். அவர்கள், வலி தாங்க முடியவில்லை என  கதறவே வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயத்தில், ஜோஸ்வா, கவுதம் ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றனர். உடனே பாதுகாப்பாக வந்த காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துஇருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யூசுப் ஆகியோர் அவர்களை ஓடாதீர்கள் என எச்சரித்தனர். ஆனாலும், அவர்கள் தப்பி ஓடினர். மரத்தின் அடியில் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த ஒரு அரிவாளை எடுத்து ஜோஸ்வா போலீசாரை  மிரட்டினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யூசுப்பின் வலது கையில் வெட்டினார். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன், ஜோஸ்வாவின் வலது காலில் முட்டுக்கு கீழ் இரண்டு இடங்களில் சுட்டார். மேலும், கவுதமின் இடது காலில் முட்டுக்கு அருகே சுட்டார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். மற்ற 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அரிவாள் வந்தது எப்படி?

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘போலீசாரை அரிவாளால் வெட்டி, தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. கைதான நபர்களின் பின்னணி குறித்தும், குற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் கோவையில் இருந்து தப்பிச்சென்றபோது அரிவாள் வைத்திருந்தனர். வழியில் வனக்கல்லூரி அருகே அரிவாளை மரத்தின் அடியில் பதுக்கி வைத்துவிட்டனர். போலீசில் சிக்கி, வேனில் வந்தபோது, அரிவாள் இருந்த இடம் அருகே வந்ததும், வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறி நடித்தனர். அரிவாளை எடுத்துக்கொண்டு போலீசாரை வெட்டி, தப்ப முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது’’ என்றார்.

Related Stories: