சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது

* சிறுமிகளுடன் இருந்த 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது, விமானம் மூலம் ஐதராபாத் அழைத்து சென்றதும் விசாரணையில் அம்பலம்

சென்னை: மகள் மூலம் சக மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பணத்தாசையை தூண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிரபல பெண் புரோக்கரை போலீசார் குடும்பத்துடன் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் என்று தெரிந்தும் பாலியல் தொந்தரவு கொடுத்த 2 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு மூலம் புகார் வந்தது.

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சமி தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான பெண் காவலர்கள் உட்பட 10 போலீசார் சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முதியவர், தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா(37) மற்றும் நதியாவின் சகோதரி தேனாம்பேட்டை டிடிகே சாலையை சேர்ந்த சுமதி(43) ஆகியோரிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்து சிறுமியை அழைத்து வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய பெண் புரோக்கரான நதியா மற்றும் அவரது சகோதரி சுமதியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. தேனாம்பேட்டை பகுதியல் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்த நதியா, அடிக்கடி பாலியல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். அதில் அதிகளவில் பணம் வந்ததால், கடந்த ஓராண்டு காலமாக நதியா தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன்(42) ஆகியோருடன் இணைந்து தனியாக பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், நதியாவின் மகள் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் பள்ளியில் படிக்கும் அழகான ஏழ்மையான மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வரும்படி தனது மகளிடம் நதியா கூறியுள்ளார். அதன்படி அவரது மகளும், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று அழைத்து வந்துள்ளார். அப்போது நதியா, மாணவிகளிடம் அவர்களின் பெற்றோர்கள் குறித்த விபரங்களை கேட்டு தெரிந்து கொள்வார்.

அதில் தாயுடன் தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் வீட்டின் வறுமையால் பள்ளி படிப்பு முடிந்து பகுதி நேரமாக வேலை செய்யும் மாணவிகளை குறிவைத்து, அவர்களுக்கு செலவுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000 கொடுத்து வசதியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை நதியா தன் வசப்படுத்தியுள்ளார். அதன்படி, சிறுமிகளை கேட்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 முதல் ரூ.35 ஆயிரம் வரை ஒரு இரவுக்கு விலை பேசி தனது சகோதரி கணவர் ராமச்சந்திரனுடன் ஆட்டோவில் அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் நதியா மாணவிகளை கடந்த ஓராண்டாக பலரிடம் அனுப்பி பணம் சம்பாதித்து கார் உள்ளிட்டவை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபரம் ஒரு மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. அவரது குடும்ப வறுமையை பயன்படுத்தி அவருக்கு நதியா பணம் கொடுத்து சரிகட்டியுள்ளார். மேலும், நதியா இன்ஸ்டாகிராம் மற்றும் லோகேடோ ஆப் மூலம் பழகி வந்த வழக்கமான சிங் ஒருவருக்கு, கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் பள்ளி மாணவியை ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்று பாலியலில் ஈடுபடுத்தி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபோல், பெண் புரோக்கர் நதியா தனது மகள் மூலம் சக பள்ளி மாணவிகளை அவரது சகோதரி சுமதி, ராமச்சந்திரன் ஆகியோர் உதவியுடன் தி.நகர், வளசரவாக்கம், ஓம்ஆர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள் என பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவில் குழந்தைகள் நல குழு அதிகாரி பாலகுமார்(35) அளித்த புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் செல்வராணி ஐபிசி 342, 366(ஏ), 370(ஏ)372, 373 ஐடி அக்ட் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா(37), அவரது சகோதரி சுமதி(43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன்(42), நேபாள நாட்டை சேர்ந்த இளம் பெண் மாயா ஒலி(29), தவறு என்று தெரிந்தும் மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய பெண்,

மற்றும் பள்ளி மாணவிகள் என்று தெரிந்து அடிக்கடி பாலியல் உறவு வைத்த கோவை பிளமேடு எல்லை தோட்டம் சாலை 2வது தெருவை சேர்ந்த அசோக்குமார்(31), சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 7 செல்போன்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாவட்ட குழந்தைகள் குழு அதிகாரிகள் அளித்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* பெற்றோர்களுக்கு வேண்டுகோள்
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், வகுப்பு முடிந்து வீட்டிற்கு சரியான நேரத்தில் வருகிறார்களா, பகுதி நேரமாக வேலை செய்யும் சிறுமிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா, அதிகளவில் பணம் வைத்திருந்தால் அதுதொடர்பாக பெற்றோர் குழந்தைகளிடம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் குழந்தைகள் நல குழு விசாரணை
பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய பெண் புரோக்கர் நதியா அளித்த வாக்குமூலத்தின்படி, 10க்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சென்னை ராயபுரம் சூரியநாரயணா சாலையில் உள்ள குழந்தைகள் நல குழு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் யார் யார் என்று ரகசியமாக பட்டியலிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: