மகளிர் டி 20 உலக கோப்பை தென் ஆப்ரிக்காவில் இன்று தொடக்கம்: இந்தமுறை சாதிக்குமா இந்தியா

கேப் டவுன்: தென் ஆப்ரிக்காவில் சீனியர் மகளிருக்கான  8வது  ஐசிசி மகளிர் டி20 கோப்பை இன்று தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 10 நாடுகள் தலா 5 நாடுகளை கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் தலா முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்  அரையிறுதிக்கு முன்னேறும். லீக் சுற்று ஆட்டங்கள்  பிப்.21ம் தேதியுடன் முடியும். கேப் டவுனில்  இன்று நடைபெற உள்ள முதல் லீக் ஆட்டத்தில்  தென் ஆப்ரிக்கா- இலங்கை மகளிர் அணிகள் களம் காண உள்ளன. இந்திய அணி  தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

அரையிறுதி ஆட்டங்கள் பிப்.23, 24 தேதிகளிலும்,  இறுதி ஆட்டம் பிப்.26ம் தேதியும் நடத்தப்படும். இந்திய அணியை பொறுத்தவரை கடந்த முறைதான் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதனால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தெ.ஆப்ரிக்காவில் நடந்த  யு-19 பிரிவின் முதல் உலக கோப்பையை வென்ற  கேப்டன் ஷபாலி வர்மா உள்ளிட்ட வீராங்கனைகள்  இந்த சீனியர் அணியிலும் இடம் பிடித்துள்ளனர். கூடவே  கேப்டன் ஹர்மன்பிரீத், ஸ்மிரிதி மந்தானா, தீப்தி சர்மா,  பூஜா வஸ்ட்ராகர், யாஷ்டிகா, தேவிகா வைத்யா,  ஆகியோர் சாதித்தால்  சீனியர் அணியும் கோப்பையுடன் நாடு திரும்பலாம்.

2வது இடத்தில் இங்கிலாந்து: முதல் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி , அதற்கு பிறகு 3 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. அந்த 3 முறையும் ஆஸியிடம் தோற்று  2வது இடத்தைதான்  இங்கிலாந்து பிடித்தது. அந்த ஆஸியும்  2016ல்  இந்தியாவில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வெஸ்ட்  இண்டீசிடம்  மண்ண கவ்வியது. கூடவே நியூசிலாந்து அணி முதல் 2 உலக கோப்பைகளிலும் 2வது இடத்தை பிடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக உள்ளது.

ஆக இங்கிலாந்து 3 முறை, நியூசி 2முறை, ஆஸி, இந்தியா தலா ஒருமுறை 2வது இடத்தை பிடித்துள்ளன.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்: இதுவரை நடந்த 7 உலக கோப்பை போட்டிகளில்  5முறை ஆஸ்திரேலியா  உலக கோப்பையை வசப்படுத்தி உள்ளது. அதை தவிர  இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்,  தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

 முதல்  உலக கோப்பையில் மட்டுமே ஆஸி  இறுதி ஆட்டத்தில் விளையாடவில்லை.  அதன் பிறகு நடந்த 6 உலக கோப்பைகளிலும் ஆஸி அணி இறுதி ஆட்டத்தில் விளையாடி இருக்கிறது.  அவற்றில் 5 முறை கோப்பையையும், ஒரு முறை 2வது  இடத்தையும் பிடித்துள்ளது. இப்போது நடப்பு சாம்பியனாக 8வது மகளிர் உலக கோப்பையில் களம் காண இருக்கிறது ஆஸி.

Related Stories: