சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு

அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு ரிஸ்க்கை எடுக்காமல் தவிர்த்ததே வெற்றிக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் போட்டியில், அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்ததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதனைத் தொடர்ந்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 126 (63), ராகுல் திரிபாதி 44 (22), சூர்யகுமார் யாதவ் 24 (13), ஹர்திக் பாண்டியா 30 (17) ஆகியோர் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது. இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் 35 (25), சான்ட்னர் 13 (13) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் சேர்த்ததால், நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்திக் பாண்டியா 16 ரன் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த சிறப்பான செயல்பாட்டால், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா தனது மிக சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருது ஹர்திக்பாண்டியாவுக்கும், ஆட்ட நாயகன் விருது சுப்மன்கில்லுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13வது டி20 தொடரை இந்தியா கைப்பற்றி அசைக்க முடியாத பலத்துடன் உள்ளதை நிரூபித்துள்ளது. போட்டிக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:- இந்த தொடரை கைப்பற்றியது குறித்தும், எனக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறித்தும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அனைவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த போட்டியை வென்றதைப் போலதான், அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக எப்போதுமே நான் ஏற்கனவே  போட்டு வைத்துவிட்டு வந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டேன்.

ஒவ்வொரு ஓவரின்  போதும் அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக கணித்து செய்கிறேன். எனது  கேப்டன்சியில் எப்போதுமே ஆட்டத்தை எளிதாக பார்க்க வேண்டும், தைரியத்துடன்  இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவேன். அதுதான் நடந்துள்ளது. இந்த வெற்றியை அணியின் உதவியாளர்களுக்கும், பிட்சில் வேலை பார்த்தவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இதே மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி  ஆடினோம். அப்போது 2வது இன்னிங்ஸ் சற்று காரசாரமாக சென்றது. ஆனால் இன்று  அந்த அளவிற்கு செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். தொடரின் கடைசி  போட்டி என்பதால் முடிந்தவரை முன்கூட்டியே முடிக்க நினைத்தேன். அதனை அணி  வீரர்கள் செய்துக்கொடுத்துவிட்டனர். இதேபோல் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: