ஐசிசி யு-19 மகளிர் டி20 இந்தியா உலக சாம்பியன்

பாட்செஃப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று, அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் 6 சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.

இந்த நிலையில், சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா யு-19 அணி முதலில் பந்துவீச, இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மெக்டொனால்டு கே அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அலெக்சா, சோபியா தலா 11 ரன், நியம் ஹாலண்ட் 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் டைடஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட், மன்னத், ஷபாலி, சோனம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் ஷபாலி வர்மா 15, ஷ்வேதா 5, கொங்கடி த்ரிஷா 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சவும்யா திவாரி 24 ரன் ஹ்ரிஷிதா பாசு (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதலாவது யு-19 மகளிர் டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள இந்திய அணி வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Related Stories: