3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்

புவனேஸ்வர்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் ஜெர்மனி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடின. சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிராஸ்ஓவர் போட்டியில் தோற்றதால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

எனினும், தகுதிநிலை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 9வது இடம் பிடித்தது. இந்த நிலையில், உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியுடன் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பெல்ஜியம் தரப்பில் புளோரன்ட் (9வது நிமிடம்), கோசின்ஸ் (10’), பூன் டாம் (58’) கோல் போட்டனர்.

ஜெர்மனி வீரர்கள் வெல்லன் நிக்லஸ் (28வது நிமிடம்), கொன்சாலோ (40’), கிராம்புஷ் (47’) ஆகியோர் கோல் அடித்தனர். இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி 5-4 என்ற கோல் கணக்கில் போராடி வென்று 3வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. அந்த அணி ஏற்கனவே 2002 மற்றும் 2006ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

Related Stories: