அடுக்குமாடி குடியிருப்புகளில் 300 ஜோடி செருப்புகளை திருடி விற்ற 3 கில்லாடிகள் சிக்கினர்: அனைத்து செருப்புகளும் பறிமுதல்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செருப்புகளை திருடி வாரச்சந்தையில் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 300 ஜோடி செருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் வெளியே விடப்பட்டிருந்த ஏராளமான காலணிகள் திடீர் திடீரென மாயமாகின.

இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அரை நிர்வாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டுகளில் தவழ்ந்தபடி வரும் மர்ம நபர் ஒருவர் வீடுகளின் வெளியே கழற்றி போடப்பட்டிருந்த செருப்புகளை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, குடியிருப்புவாசிகள் சார்பில் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கேம்ப் ரோடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார் (29), ரோஹித் குமார் (30), அருள் எப்ரின் (31) ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு, வீடுகளின் வெளியே கழற்றி போடப்பட்டிருந்த செருப்புகளை திருடி பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 300 ஜோடி காலனிகளை பறிமுதல் செய்தனர். பிறகு நேற்று முன்தினம் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: